மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி..!
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர். நாளை சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 39 பேரும் அறிவித்தனர். பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை முறைப்படி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதையடுத்து ஆட்சியமைக்கும்படி இருவரிடமும் கேட்டுக்கொண்ட ஆளுநர், இனிப்பு ஊட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்நாவிஸ், கூட்டணி அரசில் தான் அமைச்சராக இடம்பெறப் போவதில்லை என்றார். ஆனால் பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அமைச்சரவையில் பட்னாவிஸ் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தினார். இதனை ஏற்று ஏக்நாத் சிண்டே தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவியேற்க பட்னாவிஸ் ஒப்புக்கொண்டார்.
இரவு 7.30 மணி அளவில் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் ஆளுநர் பகத்ஷிங் கோஷியாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
சிவசேனா - பாஜக உறுப்பினர்களைக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கேட்டுக் கொண்டுள்ளார். பாஜக, சுயேட்சைகள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிவசேனா அதிருப்தி அணிக்கு பெரிய சிக்கல் ஏதுமில்லை.
இதனிடையே ஷிண்டே அணியைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் 4 இணை அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அமைச்சர் இலாகாக்கள் சிலவற்றை பாஜக பெறக்கூடும். சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு ஒதுக்கவும் ஷிண்டே தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
Comments