சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு பாஜக நெருக்குதல்.!
மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும், சட்டமன்றத்தைக் கூட்டி பலப்பரீட்சை நடத்த வேண்டும் எனவும் பாஜக சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள சொகுசு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு சுயேட்சைகள் உள்பட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்னாவிஸ், தாக்கரே அரசுக்கான ஆதரவை 39 சிவசேனா எம்.எல்.ஏக்கள் விலக்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டால் அதற்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட சிவசேனாக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
8 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதால் சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளனர்.
நாளை சட்டமன்றம் கூட்டப்படலாம் என்ற நிலையில், கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை திரும்பி வரவும் வாய்ப்புள்ளது.
Comments