அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!
ஏ.டி.எம்மில் கொள்ளையடிப்பதற்காக , ஓலா கால் டாக்ஸி ஓட்டுனரிடம் இருந்து காரை திருட முயன்று கொலை வழக்கில் சிக்கிய முட்டாள் கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவு சவாரியின் போது வாடகை கார் ஓட்டுனர்கள் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் , அரசன்கழனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். ஓலா தனியார் கால் டாக்ஸியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த இவர், சம்பவத்தன்று இரவு ஓலா மூலம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில், செங்கல்பட்டு அருகே மர்ம கும்பல் இவரை கொலை செய்துவிட்டு காரை கடத்திச்சென்றது.
சாலையோரம் கிடந்த இவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் மேல்மருவத்தூர் பாலத்தின் மீது கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த அர்ஜுனனின் ஷைலோ காரை மீட்டனர். 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் சம்பவத்தன்று ஓலா கார் நிறுவனத்தில் இரவு நேர புக்கிங் செய்த செல்போன் எண்ணை வைத்து கொலையாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியை சேர்ந்த முன்னாள் தலையாரி பிரசாத், திருமூர்த்தி, கட்டிமுத்து ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரித்த போது இந்த கொலை குறித்து திடுக்கிடும் தகவல் அமபலமானது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த பிரசாத்துக்கு அந்த வேலையில் சரிவர ஊதியம் கிடைக்காததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள பலாப்பழ கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது தனது ஊரைச்சேர்ந்த திருமூர்த்தி , கட்டிமுத்து மற்றும் மேலும் இருவருடன்சேர்ந்து விழுப்புரம் அருகே பாதுகாப்பில்லாமல் உள்ள தனக்கு தெரிந்த ஏடிஎம் ஒன்றை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி உள்ளனர் .
ஏடிஎம்மை உடைத்து பணம் எடுக்க முடியுமா? அதனை எப்படி உடைக்க போகின்றோம் ? என்பதை பற்றி எல்லாம் சிந்திக்காத இந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம் நிறைய பணம் இருக்கும் அதனை எப்படி எடுத்துக் கொண்டு தப்பிச்செல்ல போகிறோம் என்று யோசித்து கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் மெப்ஸ் வரை கார் ஒன்றை புக் செய்து அதில் ஏறியுள்ளனர். அந்த காரில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதால் காரின் வேகம் குறைவாக இருந்துள்ளது.
அதனால் தாம்பரம் மெப்ஸ்ஸில் இறங்கிக் கொண்டு, ஓலா ஆப்பில் வேறு ஒரு காரை புக் செய்து அர்ஜூனின் மகேந்திரா ஷைலோ காரை வாடகைக்கு அழைத்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு வந்ததும் அர்ஜீனனை காரை விட்டு இறங்கி ஓடுமாறு கத்தியை காண்பித்து மிரட்டி உள்ளனர். அதில் வாக்குவாதம் ஏற்பட்டதால் அர்ஜீனனின் கழுத்தை அறுத்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு காரை எடுத்துக் கொண்டு தப்பி உள்ளனர்.
கழுத்தை பிடித்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அர்ஜூன்தொடர்ந்து நடக்க இயலாமல் அங்கேயே விழுந்து பரிதாபமாக பலியாகி உள்ளார். திருடி சென்ற ஷைலோ காரும் வேகம் குறைவாகவே இருந்ததால் அந்த காரை மேல்மருவத்தூர் அருகே நிறுத்தி விட்டு கொள்ளை திட்டத்தை கைவிட்டு பேருந்தில் ஏறி ஊருக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகள் 3 பேரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
ஏடிஎம்மை கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட 5 முட்டாள் கொள்ளையர்கள், தங்கள் அவசர புத்தியால் காரை திருட முயன்று கால் டாக்ஸி ஓட்டுநர் கொலை வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணி வருவதாக தெரிவித்த போலீசார் , நள்ளிரவு சவாரிக்கு அழைப்பவர்கள் சந்தேகத்துக்கு இடமாக காணப்பட்டால், அவர்களுடன் ஓட்டுனர்கள் சவாரிக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது என்கின்றனர்.
Comments