தொழில்துறையில் உலகை வழிநடத்தும் இந்தியா.. புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் மோடி பெருமிதம்..!
21ஆம் நூற்றாண்டில் நான்காம் தொழில் துறை புரட்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி தலைநகர் முனிச்சில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு புலம்பெயர்ந்த இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
முன்னதாக இந்திய பெருமையை பறைசாற்றும் காணொலி ஒளிபரப்பப்பட்டதுடன், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 21 ஆம் நூற்றாண்டின் நான்காம் தொழில்துறை புரட்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு இந்தியத் தொழில்துறை பிரகாசித்து வருவதாக கூறினார்.
உலகளவில் தொடக்க நிலை நிறுவனங்களுக்கான சிறந்த சுற்றுச் சூழல் அமைப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா 3-வது இடத்திலும், மொபைல் போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் 2-வது இடத்தை இந்தியா கைவசம் கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
கடந்த நூற்றாண்டின் தொழில்துறை புரட்சியில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் முன்னிலை பெற்று பலன்களை பெற்றதாகவும், இந்தியா பின் தங்கி அடிமை நிலை கொண்டிருந்ததால் பலன்களை பெற முடியவில்லை என பிரதமர் கூறினார்.
ஆனால் நான்காம் தொழில் துறை புரட்சியில் இந்தியா பின்தங்காது என்றும் உலக நாடுகளையே வழிநடத்தி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னான்டசுடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
Comments