ஜி 7 உச்சிமாநாடு : ஜெர்மனியில் பிரதமர் மோடி - இந்தியா ஜனநாயகத்தின் தாய் என பெருமிதம்
ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முனிச் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் மூன்று நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவாரியா பகுதியில் தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு முனிச் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனியில் வாழும் இந்தியர்கள் ஒன்றுதிரண்டு பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் மோடி, 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில் முனிச் நகரில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். முன்னதாக, இந்திய பெருமையை பறைசாற்றும் காணொலி ஒளிபரப்பப்பட்டதுடன், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கலாச்சாரம், உணவு, உடை, இசை போன்ற பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருப்பதாக தெரிவித்தார். நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதுடன், 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சியால் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயன்பெற்றதாகவும், தற்போதுள்ள தொழில் புரட்சியில் இந்தியா உலகையே வழிநடத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, முனிச் நகரில் அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னான்டசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Comments