ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஜி7 நாடுகள் பங்கேற்கும் மூன்று நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவாரியா பகுதியில் இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் மோடி, மூன்று நாட்களில் 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜோ பைடன் உள்ளிட்ட தலைவவர்களுடன் அவர் பேச்சு நடத்த உள்ளார்.
டெல்லியில் இருந்து புறப்படும் முன் பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், உலகளவில் மனிதநேயத்தை பாதிக்கும் பிரச்னைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவை ஜெர்மனி அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டின் போது ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்த உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக நேரில் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments