அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்..!

0 2169

மும்பையிலும், கவுகாத்தியிலும் சிவசேனாவின் இரு அணியினரும் தனித்தனியாகக் கூடிப் பேசியுள்ள நிலையில், அதிருப்தி குழுவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களுக்குத் துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.

அசாமின் கவுகாத்தி விடுதியில் தங்கியுள்ள ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் குழுவுக்கு சிவசேனா பாலாசாகேப் எனப் பெயரிட்டுள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். 

இதனிடையே மும்பையில் சிவசேனா தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, அதிருப்தியாளர்கள் என்ன முடிவெடுத்தாலும் அதில் தான் தலையிடப் போவதில்லை என்றும், எவரும் பால்தாக்கரே பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

தங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி ஏக்நாத் சிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ள நிலையில், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் தெரிவித்துள்ளார். புனேயில் அதிருப்தி எம்எல்ஏ தானாஜி சாவந்த் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

ஓரிரு இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ள நிலையில் தானேயில் உள்ள ஏக்நாத் சிண்டே வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையைத் தடுக்கும் வகையில் மும்பை, தானே, புனே நகரங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துணை சபாநாயகர் நரஹரி சிர்வால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அதிருப்தி எம்எல்ஏக்கள் மின்னஞ்சலில் அளித்த கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டார். மாறாக அதிருப்தி குழுவைச் சேர்ந்த 16 பேருக்கு அவர் அனுப்பியுள்ள தகுதி நீக்க நோட்டீசுக்குத் திங்கள் மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே மும்பையில் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் பாஜகவினரும், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயும் கூடி ஆலோசனை நடத்தினர். 

மும்பையில் சிவசேனா தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், கட்சிக்குத் துரோகம் இழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிருப்தியாளர்கள் பால்தாக்கரே பெயரையோ, சிவசேனா பெயரையோ பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments