கார் - லாரிகளில் பாஸ்டாக் வழிப்பறி.. வாகன ஓட்டிகளே உஷார்..! கண்ணாடியை துடைப்பது போல கைவரிசை

0 7225

சுற்றுலா செல்லும் கார் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து முன்பக்க கண்ணாடிகளை துடைப்பது போல நடித்து ஸ்மார்ட் வாட்ச் வடிவ டிஜிட்டல் ரீடர் மூலம் பாஸ்டேக்கில் இருந்து பணத்தை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அரங்கேறுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

மகராஷ்டிரத்தின் புறநகர் பகுதி ஒன்றில் சொகுசு காரில் சென்ற நண்பர்கள் இருவர் சிக்னலுக்காக காத்திருந்தனர். அப்போது காரின் கண்ணாடியை துடைத்து அக்கறை காட்டிய சிறுவனுக்கு டிப்ஸ் கொடுத்து அனுப்பிவிட்டு , புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்களது காரின் பாஸ்டேக் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எந்த ஒரு சுங்கச்சாவடியையும் கடக்காத நிலையில் எப்படி தங்கள் பாஸ்டேக்கில் இருந்து பணம் களவாடப்பட்டிருக்கும் என்பதை நிதானமாக யோசித்து பார்த்தனர்.

இதில் அந்த சிக்னலை கடந்த நேரத்தில் பணம் எடுக்கப்பட்டதால் கண்ணாடியை துடைத்த சிறுவனின் வேலையாக இருக்கலாம் என்று கருதி இரு வாரங்கள் கழித்து மீண்டும் அதே பகுதிக்கு சென்று சிக்னலில் காத்திருந்த போது அங்கு வந்த மற்றொரு சிறுவன் கண்ணாடியை துடைப்பது போல நடித்து கையில் ஸ்மார்ட் வாட்ச் போல் கட்டியிருந்த டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் பேஸ்டேக்கை ஸ்கேன் செய்வதையும் அதில் சிவப்பு நிற விளக்கு எரிவதையும் கண்டுபிடித்தனர்.

தனது வேலை முடிந்ததும் அந்த சிறுவன் அங்கிருந்து செல்ல முயல, அவனிடம் டிப்ஸ் கொடுப்பது போல பேச்சுக் கொடுத்து கையில் கட்டி இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் என்ன விலை ? என்று கேட்டதும் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓட அவனை காரில் இருந்து ஒருவர் இறங்கிச்சென்று விரட்டியும் பிடிக்க இயலவில்லை.

இந்த நூதன வழிப்பறி சம்பவத்தை விவரித்து அந்த இரு இளைஞர்களும் வீடியோ பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை அகில இந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர், இந்தியா முழுவதுமுள்ள லாரி உரிமையாளர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் அனுப்பி வைத்து மகராஷ்டிரா புறநகர் பகுதியில் கண்ணாடி துடைக்க வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக லாரி உரிமையாளரான கணேஷ் தெரிவித்தார்.

வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் கார் , வேன் ஓட்டுனர்களும், சரக்கு ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்களும் உஷாராக இல்லையெனில் பாஸ்டேக்கில் உள்ள மொத்த பணத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்து விடுகிறார்கள் இந்த டிஜிட்டல் கேடிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments