இன்று கூடுகிறது சிவசேனா செயற்குழு - அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை.!
மகாராஷ்ட்ராவில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளார். அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறி உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிவசேனா கட்சியின் செயற்குழு இன்று விவாதிக்கிறது.
மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 30க்கும் மேற்பட்டோருடன், அமைச்சர் ஏக்நாத் சிண்டே கவுகாத்தியில் விடுதி ஒன்றில் முகாமிட்டுள்ளார். சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஏதிரணியாக ஒன்று திரண்டதால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், துணை முதலமைச்சர் அஜித் பவார், உள்ளிட்டோருடன் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஆட்சித் தக்கவைக்க சிவசேனா உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையின் மீது நம்பிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், துணை சபாநாயகர் Narhari Zirwal, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே காணொலி மூலம் தொண்டர்களை சந்தித்த முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, தனக்கு பதவி ஆசையில்லை என்றும் முதலமைச்சர் பதவியை துறக்க தயார் என்றார். ஏக்நாத் ஷிண்டேவுக்காக தான் வகித்த துறையை விட்டுக் கொடுத்ததாகவும், அவரது மகனுக்கு எம்.பி. பதவி வழங்கியதாகவும் உத்தவ் தாக்ரே தெரிவித்தார்.
சிவசேனா செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், பெரியளவிலான போராட்டங்கள் நடக்கக்கூடும் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் மும்பை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments