அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை வியாழக்கிழமை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த வானகரத்தில் வியாழக்கிழமை நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தன.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்ட படி நடத்தலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
பொதுக்குழு கூட்டத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், தீர்மானம் நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்கள் கொண்டு வரவோ தடை இல்லை என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.
நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும் என்றும், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதை முடிவு செய்வது கட்சிதான், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை 23 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments