வானகரத்தில் களை கட்டும் பொதுக்குழு ஏற்பாடுகள்..!

0 4691

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் தரப்பில் இருந்து இபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாளர்கள் மாறிய வண்ணம் உள்ளனர். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் பொதுக்குழுவை நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வானகரத்தில் நாளை பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் களைகட்டி வருகின்றன. பொதுக்குழு நடைபெறும் தனியார் மண்டபத்தில் அலங்கார வளைவுகளும், பொதுக்குழு மேடைக்கு செல்லும் வழியில் பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களை அமைக்கும் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பொதுக்குழு நடைபெறும் இடம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு விரிவான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அதிமுக அளித்துள்ள அடையாள அட்டை, அழைப்பிதழ் மற்றும் ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தற்போது இபிஎஸ் சக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் இல்லம் நோக்கி பேரணியாக வந்த அவர், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

4 ஆண்டுகள் திறம்பட நல்லாட்சி நடத்தி, நற்பெயர் எடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல், ஒபிஎஸ் ஆதரவாளராக இருந்த மைத்ரேயனும் இபிஎஸ் இல்லத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இதேபோல், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனிடையே, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தமது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த பல்வேறு அமைப்பினர் அவருக்கு பூங்கொத்து, சால்வைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கும்படி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் கலந்துக்கொள்ள ஒருவருக்கொருவர் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவிற்கு தவறாமல் வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இதனிடையே, மொத்தமுள்ள 2625 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 2505 உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது ஆதரவு கடிதத்தை அவர்கள் இபிஎஸ்-க்கு வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் 120 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments