ஒருபுறம் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்... மறுபுறம் பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு... ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா?
அதிமுக பொதுக் குழு செயற்குழு கூட்டத்தை நாளை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் போலீசில் மனு அளித்துள்ளனர்.
அதிமுக செயற்குழு பொதுக் குழு கூட்டம் நாளை நடக்க உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் மாஃபா. பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார், விருதுகர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர்கள் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் வீட்டில், புகழேந்தி உள்ளிட்டோர் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை அடுத்த வானகரத்தில் நாளை பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தனியார் மண்டபத்தில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மண்டபம் நுழைவு வாயில் முதல் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ், போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட நிலையில், அட்டையுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பொதுக் கூட்டத்தை ஓ.பி.எஸ். தரப்பினர் புறக்கணிக்க உள்ளதாகவும், அவரது ஆதரவாளர்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Comments