செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் - இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!
சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ந்தேதி வரை சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக, 'ஜோதி ஓட்டம்' எனும் நிகழ்ச்சி இந்தாண்டு முதல் துவங்குகிறது. இதை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் துவக்கி வைக்கிறார்.
இதில், செஸ் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்.
அதை பிரதமர் மோடி கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனிடம் வழங்குவார். செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரபலப்படுத்தவும், பொதுமக்களின் ஆதரவை திரட்டவும், இந்த ஜோதி ஓட்டம் 74 நகரங்களுக்கு செல்கிறது.
190 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதன் மூலம், இந்தப் போட்டியே, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலேயே அதிக வீரர்கள் பங்கேற்கும் போட்டியாக இருக்கும்.
100 ஆண்டுகால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா இந்த மதிப்புமிக்க நிகழ்வை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
Comments