மகளிருக்கு அதிகாரம்.. பிரதமர் மோடி பெருமிதம்.!
மத்திய பாஜக அரசு கடந்த எட்டு ஆண்டுகளாகப் பல துறைகளிலும் பெண்களுக்கு அதிகாரமளித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பாஞ்ச்மகால் மாவட்டத்தில் பவாகத் குன்றில் புதுப்பித்துக் கட்டப்பட்ட காளி கோவிலைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், புதிய இந்தியா தனது பண்டைய அடையாளத்துடன் நவீன எண்ணங்களைக் கொண்டு பெருமையுடன் வாழ்வதாகத் தெரிவித்தார்.
வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணி முடிவுற்ற ரயில்பாதைத் திட்டங்கள், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் ஆகியவற்றைத் தொடக்கி வைத்ததுடன், ரயில் நிலையங்கள் மேம்பாடு உள்ளிட்ட புதிய திட்டங்கள், குஜராத் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, இரட்டை எஞ்சின் கொண்ட தமது அரசு கடந்த எட்டாண்டுகளில் மகளிருக்குப் பல்வேறு துறைகளிலும் அதிகாரம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட அவர், ராணுவம் முதல் சுரங்கத் தொழில் வரை பெண்களின் நலனைக் கருத்திற்கொண்டு கொள்கைகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
Comments