பாக்கியராஜை நடனமாட வைத்தவர் நடக்க இயலாமல் ஒரு மாதம் படுத்த படுக்கையாகி உயிரிழந்த பரிதாபம்..!
தமிழ்சினிமாவில் ஆரம்பகாலத்தில் நடப்பதை மட்டுமே வழக்கமாக கொண்ட நடிகர்களை கூட நடனமாடவைத்த பிரபல நடன இயக்குனர் சின்னா நடக்க இயலாமல் படுத்த படுக்கையாக உயிரிழந்தார்.
சின்னா உயிரிழந்தது குறித்து திரையுலகினருக்கு தகவல் தெரிவிக்காத நிலையில் அவரது மகளும் நடிகையுமான நந்திதா உருக்கத்துடன் வெளியிட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.
முந்தானை முடிச்சு படத்தில் இயக்குனர் பாக்கியராஜுக்கு நடந்து கொண்டே எளிதாக ஆடுவது எப்படி? என்பதை கற்றுக் கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுத்தந்தவர் நடன இயக்குனர் சின்னா..!
அஜீத்குமாரின் முதல் படமான அமராவதியில் ஓடிக் கொண்டே நடனமாட வைத்து சின்ன சின்ன நடன அசைவுகளால் அந்தபாடலையும் ரசிக்க வைத்தவர் சின்னா..!
நாயகர்களுக்கு தகுந்தவாறு நடனம் அமைப்பதில் வல்லவரான சின்னா செந்தூர பாண் டி படத்தில் விஜயகாந்தையே துள்ளாட்டம் போட வைத்தவர்
தனது நடன அசைவுகளை, பாடல் வரிக்கேற்ற காட்சி அமைப்புகளால் ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்பாடல் சின்னா மாஸ்டரின் கடைசி பாடலாக அமைந்தது.
இப்படி 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த சின்னா எப்போதும் சுறு சுறுப்பாக இருக்க கூடியவர். வயது 69 ஐ தொட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கைகால் செயல் இழந்து நடக்க இயலாமல் படுத்த படுக்கையான அவரை, மகளும் நடிகையுமான நந்திதா உடன் இருந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் தமிழ் திரைஉலகின் சார்பில் எந்த ஒரு நடிகரும் , இயக்குனரும் அவருக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்று கூறப்படுகின்றது. சின்னாவின் மரணம் குறித்து நந்திதா உருக்கமான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்
பின்னர் நண்பர்கள் சுட்டிக்காட்டியதால் தான் பதிவிட்ட வீடியோவை நீக்கியதாக நந்திதா தெரிவித்தார். சினிமா பாடல் காட்சிகளில் நடக்கமட்டுமே செய்த நடிகர்களை நடனமாடவைத்தவர், தனது கடைசி காலத்தில் நடக்க இயலாமல் படுத்த படுக்கையாக உயிரிழந்தது அவருடன் பணியாற்றிய நடன கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments