அக்னிபத் திட்டத்தில் வயது வரம்பு உயர்வு.!
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு தழுவிய போராட்டத்தில் வன்முறைகள் வெடித்ததையடுத்து அக்னிபத் திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்காண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ராணுவத்தில் ஒப்பந்த முறையிலான வேலைவாய்ப்பு கூடாது எனவும், இத்திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், பீகாரில் முக்கிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
பீகாரின் பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசி தீவைத்தனர். மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் ரயில்நிலையத்தை வன்முறையாளர்கள் சூறையாடியதுடன், ரயில்கள் மீது தாக்குதல் நடத்தினர். ரயில் மறியல் போராட்டங்கள் காரணமாக 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 80க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாகச் சென்றன.
உத்தரப் பிரதேசம், உத்தகாண்ட் பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியானாவில் வாகனங்களைத் தீவைத்து எரித்தனர். இதனைத் தடுக்க முயன்ற 15 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
அக்னிபத் திட்டம் குறித்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, பணியில் சேரும் இளைஞர்களுக்கு நிச்சயமில்லாத எதிர்காலம் என்ற புகாரை மறுத்துள்ளது. அக்னிவீரர்களின் 4 ஆண்டு கால ராணுவப் பணி முடிவடைந்த பின்னர் அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன், 12ம் வகுப்புக்கு சமமான சான்றிதழ் ஆகியவற்றுடன், மத்திய ஆயுத காவல்படை மற்றும் மாநில காவல்துறை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியாததால், நடப்பாண்டில் மட்டும் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments