MGM தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு.!
தமிழகம் முழுவதிலும் எம்.ஜி.எம் குழுமத்திற்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.ஜி.எம் குழுமம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
எம்.ஜி.எம் குழுமத்தில் எம்.ஜி.எம் டிரான்ஸ்போர்ட் எனும் பெயரில் சென்னை, எண்ணூர், தூத்துக்கடி, கொச்சின், காக்கிநாடா, பாரதீப், கோவா ஆகிய துறைமுகங்களில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்குழுமம் சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரின் பேரில் எம்.ஜி.எம் குழுமத்திற்கு தொடர்புடைய தமிழகம், பெங்களூரு உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள எம்.ஜி.எம் குழுமத்தின் தலைமை அலுவலகம், ஈ.சி.ஆரில் உள்ள எம்.ஜி.எம் தீம் பார்க் மற்றும் ரிசார்ட், வேளாங்கண்ணியில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை சாந்தோமில் உள்ள எம்.ஜி.எம் குழுமத் தலைவர் எம்.ஜி.எம் மாறன் வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும், வீட்டின் மாற்றுச் சாவி இல்லை என ஊழியர்கள் கூறியதால் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளாமல் காரிலேயே அமர்ந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2007, 2011, 2012 நிதி ஆண்டுகளில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அப்போதைய தலைவராக இருந்த எம்.ஜி.எம் மாறன் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.ஜி.எம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு 35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையினரின் தொடர் விசாரணையில், எம்.ஜி.எம் மாறனுக்குச் சொந்தமான 500 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் வருமான வரித்துறை களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments