பேரனின் ஆசையை நிறைவேற்ற ஊருக்கு ஹெலிகாப்டரில் சென்ற தூத்துக்குடி இரும்பு வியாபாரி..!
தூத்துக்குடியை சேர்ந்த இரும்பு வியாபரி ஒருவர் தனது பேரனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தனது குடும்பத்தை ஹெலிகாப்டரில் ஊருக்கு அழைத்துச்சென்று அசத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவருக்கு நடராஜன், ராஜதுரை என இரு மகன்கள் , 20 வருடங்களுக்கு முன்பு இவர்களது குடும்பம் ஊரை விட்டு கும்மிடிபூண்டிக்குச் சென்று இரும்பு வியாபாரம் செய்துவருகின்றனர். ராஜதுரை ஜவுளிக்கடை நடத்தி வருகின்றார்.
பாலசுப்பிரமணியனின் பேரன் தனது தந்தை நடராஜன் மற்றும் தாத்தாவிடம் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்று ஆசையை தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து தீத்தாம்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு ஹெலிகாப்டரின் செல்ல பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதற்காக பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்து 8 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் குடும்பத்துடன் பயணித்த இரும்பு வியாபாரியின் குடும்பத்தினர், புழுதி பறக்க தங்கள் கிராமத்திற்கு சென்று தடபுடலாக தரையிறங்கினர்.
ஊர் நிர்வாகிகள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க கிராமத்து பெண்கள் ஹெலிகாப்டருன் செல்பி எடுத்துக் கொண்டனர்.சாமி தரிசனம் முடிந்ததும் அனைவரும் அதே ஹெலிகாப்டரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். முன்னதாக தனது மகனின் ஆசையை நிறைவேற்ற இந்த முறை ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து வந்திருப்பதாகவும், தனது மகன் வளர்ந்து பெரியவனானதும், சொந்தமாகவே ஹெலிகாப்டரை வாங்கி அதில் வந்து இறங்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார் இரும்பு வியாபாரி நடராஜன்.
இரும்பு வியாபாரிக்கு 8 லட்சம் ரூபாய் என்பது எட்டாத காசு என்றாலும் லட்சியத்தை அடைய லட்சங்களை செலவு செய்ததோடு நிற்காமல் தனது மகன் அவன் காலத்தில், ஹெலிகாப்டரை விலைக்கு வாங்குவான் என்ற நம்பிக்கையை விதைத்திருப்பது வரவேற்புக்குரியது.
Comments