கோழிக் குழம்பு வைக்காத 2வது மனைவிக்கு 10 இடங்களில் கத்திக்குத்து..! அனாதையான பெண் குழந்தை
கோழிக்கறி குழம்பு வைக்காத ஆத்திரத்தில் மனைவியை 10 இடங்களில் கத்தியால் குத்திக் கொன்ற ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹரிஹரா தாலுகா பன்னிகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கெஞ்சப்பா. ரோடு ரோலர் ஓட்டுனரான கெஞ்சப்பா முதல் மனைவி இருப்பதை மறைத்து, ஷீலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கெஞ்சப்பாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உயிருடன் இருப்பதும், குழந்தை இல்லாத காரணத்தால் அதை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் ஷீலாவுக்கு தெரியவந்தது.
கணவனின் நடத்தையை கண்டு கொள்ளாமல் ஷீலா இருந்த நிலையில் ஷீலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கெஞ்சப்பா அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த கெஞ்சப்பா, மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைத்து தரும்படி கூறிவிட்டு வெளியே சென்றதாகவும், வீடு திரும்பியபோது ஷீலா கோழிக்கறி குழம்பு வைக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதில் ஆத்திரம் அடைந்த கெஞ்சப்பா மீண்டும், ஷீலாவிடம் தகராறு செய்து அவரை அடித்து, உதைத்தார். ஷீலாவின் நடத்தையையும் விமர்சித்து தகாத வார்த்தைகளால் திட்டியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடங்காத கெஞ்சப்பா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷீலாவை சரமாரியாக குத்தினார். இதில் உடலில் 10 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததால் பலத்த காயம் அடைந்த ஷீலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கெஞ்சப்பாவையும் கைது செய்தனர்.
கெஞ்சப்பாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில் தாயை பறிகொடுத்து விட்டு ஆதரவற்ற நிலையில் தவித்த அவரது பெண்குழந்தையை கெஞ்சப்பாவின் முதல் மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
குழந்தை இல்லை என்று எந்த பெண்ணை ஒதுக்கினாரோ அந்த பெண் தான் தற்போது கெஞ்சப்பாவால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட குழந்தைக்கு தாயாக தஞ்சம் அளித்துள்ளார் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.
Comments