பைக் ரேஸர்களால் தூக்கிவீசி கொல்லப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்... சாலையில் கிடந்த சடலம்.!
சென்னை அடுத்த வண்டலூர் வெளிவட்ட சாலையில் 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற ரேஸ் பைக் மோதியதில் மொபட்டில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் தூக்கிவீசப்பட்டு பலியானார் . உயிரை பறித்த அடங்காத பைக்ரேஸ் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை புறநகர் பகுதிகளை இணைக்கும் வெளிவட்ட சாலை உள்ளது. 6 வழிச்சாலையான இதில் 100 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆட்டோ மற்றும் பைக் ரேசர்கள் இந்த சாலையை பந்தய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பந்தய ரேஸ் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் ஞாயிற்று கிழமை காலை 6 பேர் கொண்ட கும்பல் 3 பைக்குகளில் அதிவேகமாக வண்டலூரில் இருந்து மீஞ்சூர் நோக்கி ரேஸ் விட்டுள்ளனர்.
பூந்தமல்லியை சேர்ந்த ரேசர் நவீன் என்பவர் பைக்கை 180 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச்செல்ல, அவரது நண்பர் விஷ்வா என்பவர் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது தாம்பரம் செல்ல வேண்டிய ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி என்பவர் வழிதவறி தனது ஸ்கூட்டியில் மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்தார்.
அதிவேகத்தில் வந்த நவீன் , காவல் ஆய்வாளரின் மீது பயங்கரமாக மோதி உள்ளான். இதில் தூக்கிவீசப்பட்ட காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தூக்கிச்செல்லக்கூட ஆள் இல்லாமல் காவல் ஆய்வாளரின் சடலம் சாலையில் கிடந்தது. மோதிய வேகத்தில் ரேஸ்பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட விஸ்வா என்ற இளைஞருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டது
அதிவேகத்தில் வந்து ஒரு உயிரை கொன்றுவிட்டு, உடன் வந்த நண்பரையும் ஊனமாக்கிய ரேசர் பாய் நவீன் பைக்குடன் தப்பமுயன்ற நிலையில் அங்கிருந்த வாகன ஓட்டிகள் அவனை மடக்கினர்
விஸ்வாவுடன் சேர்த்து அவனையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்த போலீசார் சாலையில் கேட்பாரின்றி கிடந்த ஓய்வு பெற்ற பெண்காவல் ஆய்வாளரின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரேஸில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடியும் எனவே ஆயிரங்களை பந்தயமாக கட்டி மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் பைக்குகளிலும், ஆட்டோக்களிலும் ரேஸ் வித்தை காட்டி மரணபயத்தை காட்டும் விபரீதகர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments