குடியரசுத் தலைவர் தேர்தல்... என்ன செய்யப்போகின்றன எதிர்க்கட்சிகள்..?

0 3159

குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. இதனிடையே குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 2 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அறிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூடுதலாக சில கட்சிகள் ஆதரவளித்தாலே தேர்தலில் வென்றுவிடலாம் என சூழல் தற்போது நிலவுகிறது. இதற்காக, பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைக் பாஜக கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், பொது வேட்பாளரை அறிவித்து குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் தொடர்பாக வரும் 15ஆம் தேதி டெல்லியில் ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உட்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

அக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் முக்கியத் தலைவர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, மம்தா அழைப்பு விடுத்த கூட்டத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று டெல்லியில் தேர்தல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தவிருந்தார். ஆனால், கொரோனா தொடர்பான சிகிச்சைக்காக சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சரத் பவார் இன்றைய ஆலோசனை திட்டத்தை கைவிட்டதாக சொல்லப்படுகிறது.

வரும் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், வரும் வாரத்தில் ஆளும் பாஜக சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் வேட்பாளரின் பெயர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுவேட்பாளர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தங்கள் கட்சித் தலைவரான ஜே.பி.நட்டாவிற்கு பாஜக அதிகாரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments