வைகாசி விசாகம்.! முருகன் திருத்தலங்களில் கோலாகலம்.!

0 2706

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெறும் திருவிழாவில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பாலாபிஷேகம் செய்தும் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முருகனின் அவதார தினமான நாளாக கருதப்படும் இன்றைய தினம் வழிபட்டால் ஆண்டு முழுவதும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

திருத்தணியில் உள்ள ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் பால் குடம் ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோயிலுக்கு வந்த பக்தர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments