கட்சித்தலைவரை காரில் கடத்திய கும்பல்.... அடித்து உதைத்து சித்ரவதை.... 3 மணி நேரத்தில் வளைத்து பிடித்த போலீசார்....
சென்னையில் கட்சித்தலைவர் ஒருவரை காரில் கடத்திய கும்பலை போலீசார் 3 மணி நேரத்தில் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். சினிமா காட்சிகள் போல் பரபரப்புடன் இந்த கடத்தல் காட்சிகள் அரங்கேறியுள்ளன.
சென்னையில் பரபரப்பு மிகுந்த கோயம்பேட்டில் நேற்றிரவு சினிமா காட்சிகள் போல் கடத்தல் சம்பவம் ஒன்று அரங்கேறியது. சென்னை புளியந்தோப்பு பகுதி டிமலஸ் சாலையை சேர்ந்தவர் சாலமன். 42 வயதாகும் இவர் கட்சி ஒன்றை நடத்திவருவதாக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வரும் இவர் நேற்றிரவு தனது நண்பர் விஜயகுமாருடன் கோயம்பேட்டில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த சில நபர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாலமனை அடித்து உதைத்து வெள்ளைநிறக் கார் ஒன்றில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாலமனின் நண்பர் விஜயக்குமார் அந்த கார் எண்ணை கூறி போலீசிடம் புகார் தெரிவித்தார். கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ் பாபுவுக்கு தகவல் பறக்கவே, போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.
சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் தகவல் பறந்தது. கடத்தல் காரை மடக்கி பிடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு அபிராமிநகர் 4 வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு ஒரு வீட்டில் இருந்து அலறல் சத்தம் வருவதையும், அந்த வீட்டின் அருகே கடத்தல் கார் நிற்பதையும் கண்டு பிடித்தனர். உடனடியாக சமயோஜிதமாக அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிய போலீசார் கூடுதலாக காவலர்களை வரவழைத்தனர்.
பின்னர் வீட்டின் கதவை திறந்த போலீசார் அங்கு கடத்தல் கும்பலை சேர்ந்த கண்ணன், சுரேஷ், சரவணன், நாராயண மூர்த்தி என்ற 4 பேரை கைது செய்தனர். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சாலமனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரியல் எஸ்டேட் கொடுக்கல் வாங்கலில் 55 லட்சம் ரூபாயை சாலமன் ஏமாற்றியதாகவும், பணத்தை திரும்பி வாங்கவே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடத்தல் சம்பவம் நடைபெற்ற 3 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை மடக்கி பிடித்தது குறித்து விவரிக்கிறார் உதவி ஆய்வாளர் செல்லத்துரை....
சமயோஜிதமாக செயல்பட்டு 3 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை கைது செய்த, உதவி ஆய்வாளர் செல்லதுரை, ரோந்து வாகன ஓட்டுநர் பூங்காவனம் ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.
Comments