8 ஆண்டு காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள்.. வளர்ச்சிக்கு வித்திட்டதாக பிரதமர் பெருமிதம்
பாஜக ஆட்சியில் கடந்த 8 ஆண்டு கால சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ச்சியின் வேகத்திற்கு தடையாக பல்வேறு வழக்கற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும் கடந்த எட்டு ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முக்கிய சீர்திருத்தங்கள் பற்றிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
தமது இணையதளத்தில் வெளிடப்பட்ட கட்டுரையை சுட்டிக்காட்டி பகிர்ந்த பிரதமர், நீடித்த வளர்ச்சி, பரவலான செழிப்பை பரப்பவும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சியின் வேகத்திற்கு தடையாக இருந்த பல்வேறு வழக்கற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற கோட்பாட்டை மத்திய அரசு பின்பற்றி, எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை மேம்படுத்தும் ஏராளமான சீர்திருத்தங்கள் கொண்டு வரபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள் உள்ளதாகவும், 100 நிறுவனங்கள் 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட யூனிகார்ன் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இதுவரை இல்லாத அளவாக 2021-22ஆம் ஆண்டில் 83 பில்லியன் அன்னிய முதலீடு பெற்றதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Comments