ரூ.2 லட்சம் கடனுக்கு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. கந்துவட்டியால் கரைந்த உயிர்.. மீட்டர் வட்டி மைதிலி கைது..!

0 3989
ரூ.2 லட்சம் கடனுக்கு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. கந்துவட்டியால் கரைந்த உயிர்.. மீட்டர் வட்டி மைதிலி கைது..!

வீடு வாங்கும் கனவில்  இருந்த பாஸ்ட்புட் கடைக்காரர், வீடு வாங்க முன் பணம் கொடுத்து விட்டு, மீதி பணம் கொடுக்க முடியாத சூழலில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடைசியில் தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. 

சென்னை கொளத்தூர் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான சுதாகர், தனது குடும்பத்துடன் 4 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

குன்றத்தூரில் பாஸ்ட்புட் கடை ஒன்றை நடத்தி வந்த சுதாகர், கடந்த 8ம் தேதி வீட்டின் படுக்கையறையில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுதாகர் நீண்ட நேரம் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு, உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சுதாகர் செங்குன்றம் பகுதியில் ராஜன் என்பவரிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டை விலைக்கு வாங்கி, முன் பணமாக 20 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை தனது மனைவி மகேஸ்வரி பெயரில் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.

மீதி பணம் 25 லட்சம் ரூபாயை கொடுக்க முடியாமல் சுதாகர் அவதிப்பட்டு வந்த நிலையில், போலி பத்திரம் மூலம் ராஜன் அந்த வீட்டை வேறொரு நபருக்கு விற்க முயன்றதும் இது தொடர்பான வழக்கு செங்குன்றம் காவல்நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில், கடந்த 2013ம் ஆண்டு ராஜனின் உறவினரான கொளத்தூரைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்ணிடம் சுதாகர், தொழிலுக்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதற்காக அவர் மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், வாங்கிய பணத்தை கொடுக்கமாறு மைதிலி தொடர்ந்து கேட்டு வந்ததால் அண்மையில் சுதாகர் தான் கையொப்பமிட்ட காசோலையை மைதிலியிடம் கொடுத்துள்ளார்.

அந்த காசோலையில் 10 லட்சம் ரூபாய் என பூர்த்தி செய்த மைதிலி, அதனை வங்கியில் செலுத்தி செக் பவுன்ஸ் செய்தது சுதாகருக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து கேட்ட போது, 2 லட்சம் ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் தர வேண்டுமெனக் கூறிய மைதிலி பணத்தைக் கேட்டு தொடர்ந்து சுதாகரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதே சமயம், ராஜனும் வீட்டிற்கான மீதி பணத்தை கொடுக்குமாறு சுதாகருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கந்து வட்டிக் கொடுமையாலும் வாங்கிய வீட்டிற்கான மீதி தொகையை செலுத்த முடியாததாலும், மன உளைச்சலில் இருந்த சுதாகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சுதாகரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார், மைதிலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சுதாகரின் வீடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் செங்குன்றம் போலீசார், ராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments