என்.ஐ.ஏ சோதனை பின்னணி என்ன?.. தற்காப்பு பயிற்சி வழங்குவதாகக்கூறி மூளைச்சலவை..!
தற்காப்பு கலை பயிற்சி வழங்குவதாகக் கூறி இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாரில் சாதிக் பாட்சா என்பவர் தொடர்புடைய 9 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி உள்ளிட்ட 5 பேர் கடந்த பிப்ரவரியில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காரில் வந்த போது காவல் துறையினர் மடக்கி விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் காவல்துறையினரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, துப்பாக்கி, போலீஸ் பயன்படுத்தும் கைவிலங்கு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், சாதிக் பாட்சாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சில அமைப்புகளை உருவாக்கி ஆள் திரட்டி வருவது தெரியவந்ததால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ. கையில் எடுத்தது. சாதிக் பாட்சா, இக்காமா எனும் தற்காப்பு கலை பயிற்சி மையத்தை நடத்தி வந்தால், அதே பெயரில் பிரபலமானார். தற்காப்பு கலை பயிற்சி வழங்குவதாக இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக என்.ஐ.ஏ தனது முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னையில் மண்ணடியிலும், அண்ணா சாலையில் உள்ள பழைய பாழடைந்த வணிக வளாகத்திலும் சோதனை நடந்தது. அப்துல் சாதிக் என்பவருக்கு சொந்தமான அந்த பாழடைந்த கட்டடத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்த சாதிக் பாஷா, 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருவதாக கூறி பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Comments