உயிரித் தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி.. 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி.!
இந்தியாவின் உயிரித் தொழில்நுட்பப் பொருளாதாரம் கடந்த எட்டாண்டுகளில் எட்டு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் உயிரித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் கண்காட்சி மத்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நலவாழ்வு, மரபியல், உயிரிமருந்துகள், வேளாண்மை, மாசில்லா எரியாற்றல் உள்ளிட்ட பல பிரிவுகளில் முந்நூறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உயிரித்தொழில்நுட்பச் சூழல் அமைவுகொண்ட முன்னணிப் பத்து நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும் நாள் நெடுந்தொலைவில் இல்லை எனத் தெரிவித்தார்.
பல்வேறு வகை மக்கள், பல்வேறு காலநிலை மண்டலங்கள், அறிவுத்திறனுள்ள மனிதவளம், எளிதாகத் தொழில் செய்யும் சூழல், உயிரித் தயாரிப்புகளுக்கான தேவை ஆகியன உள்ளதால் உயிரித்தொழில்நுட்பத் துறையில் பெருமளவு வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
கடந்த எட்டாண்டுகளில் 60 வகையான தொழில்களில் 70 ஆயிரம் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டவை உயிரித்தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Comments