ஆன்லைனில் கடன் வழங்குவதாக மோசடி.. ஆவணங்களை திரட்டி கைவரிசை..!

0 3351

ஆன்லைனில் கடன் வழங்குவதாக கூறி கோடிகணக்கான ரூபாய் மோசடி செய்த புனேவை சேர்ந்த கும்பலை தேனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பாவிகளின் ஆவணங்களின் மூலம் 30 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தேனியில் புத்தகக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் குமார். அவசர தேவைக்காக இவர் ஸ்பீடு ஆப் என்ற ஆன்லைன் செயலி மூலம் 6 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். இதற்காக அவர் தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் செல்பி புகைப்படம் ஆகியவற்றை அனுப்பியுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தியும் கூடுதல் பணம் கேட்டு ஆன்லைன் செயலி நபர்கள் அவரை மிரட்டியுள்ளனர்.

இல்லையென்றால் அவர் கொடுத்த ஆவணங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்திரித்து அவருடைய தொடர்பில் உள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துப்போன ராஜேஷ்குமார் மேலும் 8400 ரூபாய் செலுத்தியுள்ளார். இருப்பினும் கூடுதல் பணம் கேட்டு ஸ்பீடு ஆப் நபர்கள் தொடர்ந்து அவரை மிரட்டியுள்ளனர். இதனால், பரிதவித்த ராஜேஷ் குமார் தேனி சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அந்த ஆன்லைன் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை கண்காணித்து விசாரணை நடத்தினர். அந்த செயலி நிறுவனத்தின் பெயரில் 6 வங்கி கணக்குகளும், புனேவை சேர்ந்த சாகர் அங்கூஸ் சோர்கி என்ற நபர் பெயரில் மற்றொரு வங்கி கணக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வங்கிக்கணக்குகளை ஆராய்ந்த தனிப்படை போலீசார், பெரிய அளவில் கோடி கணக்கான ரூபாய் அளவிற்கு அந்த செயலி நிறுவனம் மோசடி செய்திருக்கலாம் என கருதி, புனேவுக்கு நேரில் சென்று அங்கூஸ் சோர்கியை கைது செய்தனர். ஆனால், அவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி என்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி பிரபுல் என்ற நபர் ஆவணங்களை பெற்று சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பிரபுலின் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கிருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பணம்,10 செல்போன்கள், இரண்டு கம்ப்யூட்டர்கள், இரண்டு கலர் பிரிண்டர்கள், 17 காசோலைப் புத்தகங்கள் எட்டு ஏடிஎம் கார்டுகள் மற்றும் 10 சிம்கார்டுகளை போலீசார் கைப்பற்றினார்கள். இவர்களது speed app நிறுவனம் தொடர்பான வங்கி கணக்குகளில் உள்ள 30 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் இந்த கும்பல் 11 கோடி ரூபாயை ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்துள்ளது.

சீனாவை சேர்ந்த ஜேம்ஸ் என்ற நபரின் தலைமையில் இவர்கள் 4 குழுக்களாக செயல்பட்டுள்ளனர். ஆன்லைன் மென்பொருள் குழு, கால் சென்டர் குழு, ஆவணங்களை மார்பிங் செய்யும் குழு, பண பரிவர்த்தனைகுழு என இவர்கள் 4 குழுக்களாக சர்வதேச அளவில் செயல்பட்டுள்ளனர்.

துரித நடவடிக்கை மேற்கொண்டு இந்த மோசடி கும்பலை கைதுசெய்த தேனிகாவல்துறையினருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த கும்பலால் மேலும் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் முன் முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர் இந்த கும்பலுடன் தொடர்புடைய பிற நபர்களையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments