அடகு வைத்த நகைகள் மாயம்.. மாற்று நகை வழங்கிய வங்கி ஊழியர்கள்.. பணியிடை நீக்கம் செய்த இணைப்பதிவாளர்.!
புதுக்கோட்டை அருகே தனது சொந்த தேவைகளுக்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 159 புள்ளி 800 கிராம் நகைகளை கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி செயலாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்திருந்த 4 சவரன் நகையை மீட்க வாடிக்கையாளர் ஒருவர் வந்த நிலையில், அவரது நகைகள் மாயமானது தெரிய வந்தது.
இதையடுத்து, அவருக்கு மாற்று நகை வழங்கப்பட்ட நிலையில், இதர வாடிக்கையாளர்கள் நகை உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ளுமாறு அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இத்தகவலை தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 5 லட்சம் மதிப்புடைய 159 புள்ளி 800 கிராம் நகைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் தனது சொந்த தேவைகளுக்காக நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்ததும், வங்கியின் செயலாளர் அதற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்ட நிலையில், அறந்தாங்கி சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Comments