கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் பலி..!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் நீரில் முழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் என 7 பேர் உயிரிழந்தனர்.
குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் கீழ் அருங்குணம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் இன்று காலையில் குளிக்கச் சென்றனர். அந்த தடுப்பணையின் கரையில் குளித்தவர்கள், சிறிது நேரத்தில் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த தடுப்பணையில் பள்ளமான இடத்தில் அவர்கள் சிக்கியதாக சொல்லப்படும் நிலையில், முதலில் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயன்ற உடனிருந்தவர்களும் அடுத்தடுத்து மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்களும், தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் தண்ணீரில் மூழ்கியவர்களை நீண்ட நேரம் தேடினர். இதை அடுத்து, தண்ணீரில் மூழ்கிய நான்கு சிறுமிகள், மூன்று பெண்கள் ஆகிய 7 பேருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிகள், இளம்பெண்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது பெற்றோர், உற்றார் உறவினர்கள் கதறி துடித்தனர்.
உடல்களை பார்வையிட்டு நேரில் விசாரணை மேற்கொண்ட கடலூர் எஸ்.பி சக்தி கணேசன், பெற்றோர், உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
Comments