11 அடுக்கு - 794 அறைகள்.. அசர வைக்கும் சொகுசு கப்பல் சுற்றுலா..!

0 6446
11 அடுக்கு - 794 அறைகள்.. அசர வைக்கும் சொகுசு கப்பல் சுற்றுலா..!

தமிழகத்தில் முதன் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கார்டிலியா சொகுசுக் கப்பலின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் வழியே புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்களும் பயணிக்கும் வகையில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்படவுள்ளது. 11 அடுக்குகள் கொண்ட இந்த கப்பல் தான் நாட்டிலுள்ள பெரிய சொகுசு கப்பல்களுள் ஒன்றாகும்.

700 அடி நீளமுள்ள அந்த சொகுசுக் கப்பலில் 794 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 10 பெரிய உணவகங்கள், கலைநிகழ்ச்சிகள் காணும் இடங்கள் ஆகியவை உள்ளன. மேலும், மதுக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், மசாஜ் நிலையம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

கார்டிலியா சொகுசுக் கப்பலில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 800 பயணிகள் மற்றும் 800 பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 600 பேர் வரை பயணிக்கலாம். இந்த கப்பலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயாகவும், உயர் வகுப்பு பயணத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து கார்டிலியா சொகுசுக் கப்பலின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையிலிருந்து தொடங்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் சேவையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments