17 வயதுச் சிறுமியைக் கடத்தி பென்ஸ் காரில் பலாத்காரம்... 6 பேர் மீது வழக்குப் பதிவு..!

0 4742

ஐதராபாத்தில் பப்புக்குச் சென்ற 17 வயதுச் சிறுமியை பென்ஸ் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அரசியல் செல்வாக்குள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் மூவரைக் கைது செய்துள்ளனர். 

மே 28ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பப்புக்குத் தனது தோழியுடன் சென்ற 17 வயது மாணவி, தோழி சென்ற பின்னரும் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அவரைக் காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிடுவதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களுடன் பென்ஸ் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முதலில் ஒரு கேக் பேக்கரிக்குச் சென்ற பின், அங்கிருந்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு ஒருவர் பின் ஒருவராக மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த பின் ஓரிடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய மாணவியின் கழுத்தில் சிறு காயங்கள் இருப்பதைக் கண்ட சிறுமியின் தந்தை அது குறித்து விசாரித்துள்ளார். தன்னைச் சிலர் தாக்கியதாகச் சிறுமி கூறியதை அடுத்து அவரது தந்தை இது குறித்துக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாணவியிடம் பெண் காவலர்கள் விசாரித்தபோது அவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்தவர்களில் சட்டமன்ற உறுப்பினரின் மகன், வக்ப் வாரியத் தலைவரின் மகன் ஆகியோரும் இருப்பதாகச் சிறுமி தெரிவித்த நிலையில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டனர். 

இந்த வழக்கில் சாதுத்தீன் மாலிக் என்பவனை நேற்றுக் கைது செய்த காவல்துறையினர் இன்று மேலும் இருவரைக் கைது செய்துள்ளனர். மூவரைத் தேடி வருகின்றனர். 21 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தான் மது வழங்கலாம் என விதிமுறை உள்ளபோது சிறார் சிறுமியரை எப்படி பப்புக்குள் அனுமதித்தனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சிறுமி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையோரின் செல்வாக்கு, தகுதி பற்றிப் பாரபட்சம் பாராமல் அனைவரையும் கைது செய்யும்படி ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சித் தலைவரும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமராவ், உள்துறை அமைச்சர், டிஜிபி, ஐதராபாத் காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையோரைக் கைது செய்யக் கோரி ஜூபிளி ஹில்ஸ் காவல்நிலையம் முன் ஜனசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments