கோவிட் பரவல் அதிகரிப்பு- 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்.!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கண்காணிப்பை அதிகரிக்கும்படி தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் சில பகுதிகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவி வருவதையடுத்து 5 அம்சத் திட்டத்தைப் பின்பற்றும்படி 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி கோவிட் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மகாராஷ்ட்ராவிலும் கேரளத்திலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதையடுத்து இந்த 5 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் அடைந்த பயன்கள் வீணாகி விடாமல் இருக்க, தொடர்ந்து கண்காணிப்பை அதிகரிக்கும்படியும் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சையளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாதவர்களைத் தேடி கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்துமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள கோவிட் விதிகளைப் பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments