உத்தரப்பிரதேச முதலீட்டாளர் மாநாடு.! ரூ.8000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

0 2627

உத்தரப் பிரதேச முதலீட்டாளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து, எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, கடந்த எட்டாண்டுகளில் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்கிற மந்திரத்தைக் கொண்டு நாடு முன்னோக்கி நடைபோட்டுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து லக்னோவுக்குத் தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்த பிரதமருக்கு நினைவுப் பரிசு கொடுத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

முதலீட்டாளர் மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

முதலீட்டாளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த நிதியாண்டில் 1700 கோடி டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும், ஜி 20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை இந்தியா கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சில்லறை வணிகத்தில் உலகில் இரண்டாமிடத்திலும், எரியாற்றல் நுகர்வில் மூன்றாமிடத்திலும் இந்தியா உள்ளதாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் ஒரே வரிமுறை, ஒரே மின் தொகுப்பு, ஒரே ரேசன் கார்டு நடைமுறைப்டுத்தியது அரசின் உறுதியான தெளிவான கொள்கைகளைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் எண்பதாயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டுக்கான உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனவும் அடுத்த பத்தாண்டுகளில் உத்தரப் பிரதேசம் பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments