'தல' டோனி மீது மோசடி வழக்கு.. போலீசார் அதிரடி..!
கிரிக்கெட் வீரர் டோனியை சேர்மனாக கொண்டு இயங்கும் உர நிறுவனம் வழங்கிய 30 லட்சம் ரூபாய் காசோலை பணமில்லாமல் திரும்பியதால், டோனி மீது போலீசார் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகாரை சேர்ந்த DS Enterprises என்ற நிறுவனம், கிரிக்கெட் வீரர் டோனியை சேர்மனாக கொண்ட நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, டோனியின் நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை.
இதனால் விற்பனையாகாமல் இருந்த மொத்த உரங்களையும் நியூ குளோபல் உர நிறுவனம் திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக தாங்கள் ஏற்கனவே பெற்ற 30 லட்சம் ரூபாய்க்காக காசோலையை வழங்கியது.
அந்த காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது பணமில்லை என்று திரும்பியதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக, டோனியின் நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு டோனியின் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா, நியூ குளோபல் நிறுவனத்தின் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தனர் . நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நியூ குளோபல் நிறுவன சேர்மன் டோனி, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்ததால் இவ்வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்திற்கு சேர்மனே டோனி தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செக்மோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இதன் விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் கிடைத்த புகழ் மூலம் விளம்பரங்களில் நடித்து பல நூறு கோடிகளை குவித்துள்ள டோனிக்கு எதிராக 30 லட்சம் ரூபாய் செக்மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Comments