கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலனுக்கான நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்

0 2344

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து பணப் பயன்களைப் பிரதமர் மோடி விடுவித்தார்.

அதன்பின் பயனாளர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றால் குடும்பத்தினரை இழந்தோரின் துன்பம் எத்தகையது எனத் தான் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உயர்கல்விக்குக் கல்விக்கடன் வழங்கப் பிஎம் கேர்ஸ் உதவும் என்றும், அவர்களின் அன்றாடத் தேவைக்கு மாதந்தோறும் நாலாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். குழந்தைகளிடம் ஒரு பிரதமராகத் தான் பேசவில்லை என்றும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகப் பேசுவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய பிள்ளைகள் பள்ளிக்கல்வியை முடித்ததும் உயர்கல்வியைத் தொடர நிறையப் பணம் தேவைப்படும் என்றும், அதனால் 18 வயது முதல் 23 வயது வரை அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு 23 வயது நிறைவடையும் போது பத்து இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் மருத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஐந்து இலட்ச ரூபாய் வரை இலவசச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். எத்தகைய உதவியும் முயற்சியும் பெற்றோரின் அன்புக்கு ஈடாகாது எனக் குறிப்பிட்ட பிரதமர், பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்குப் பாரதத் தாய் துணையிருப்பதாகத் தெரிவித்தார்.

இது ஒரு தனிமனிதரின், அமைப்பின், அரசின் முயற்சி இல்லை என்றும், மக்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தில் வழங்கியதாகும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா சூழலில் மருத்துவமனைகளில் வசதி செய்யவும், வென்டிலேட்டர்கள் வாங்கவும், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவவும் பிஎம் கேர்ஸ் நிதி உதவியதாகவும், இதனால் எண்ணற்ற உயிர்கள் காக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொரோனா சூழலில் அகால மரணமடைந்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குப் பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments