சென்னையில் கலைஞர் சிலை திறப்பு.. வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்...
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 16 அடி உயர முழு உருவ சிலையை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை பொதுப்பணித்துறை சார்பில் நிறுவப்பட்டுள்ளது.
14 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வெண்கல சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்து வைத்தார். பின்னர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அண்ணாசாலையில் கலைஞரின் சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இதுவரை அமைக்கப்பட்ட சிலைகளிலேயே இதுவே உயரமானதாகும்.
இதனை அடுத்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என குறிப்பிட்டார். அனைத்து துறைகளிலும் கலைஞர் கோலோச்சியவர் என்றும், இலக்கியம், திரைத்துறை என பல துறைகளில் அவர் முத்திரை பதித்தவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, கலைஞர் கருணாநிதி மிகச்சிறந்த நிர்வாகி என்றும் நிலையான நல்லரசை தந்தவர் என்றும் பாராட்டுக்களை தெரிவித்தார். மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடு வளரும் என்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மற்ற மொழிகளை கற்பதில் தவறு இல்லை என்றும் நமது தாய் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். வீட்டில் எப்போதும் தாய் மொழியிலேயே பேச வேண்டும் என்றும் மம்மி, டாடி கலாச்சாரத்தை விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், எந்நாட்டிற்கு சென்றாலும் பாரம்பர்ய உடையே அணிந்து செல்வதாக கூறிய வெங்கையா நாயுடு, தான் குடியரசுத் துணை தலைவரான பிறகும் அதனை மாற்றவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments