குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?
சினிமாவில் வருவது போல கொளுந்து விட்டு எரியும் தீயின் முன்பு நின்று ரீல்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தீவைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்த சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விவேக், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சுக்கு நீதி படம் பார்க்க சென்றுள்ளார்.
திரைபடத்தில் தீக்கு முன்னால் நாயகன் நடந்து வருவது போன்று காட்சிகளை பார்த்து விட்டு தானும் இது போல நெருப்புக்கு மத்தியில் வீடியோ ரீல்ஸ் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணி திருப்பத்தூர் ப.உ.ச நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்றுள்ளார்.
திடக்கழிவு மேலாண்மை மூலம் உரமாக மாற்றுவதற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்கு உதவியாளர் மூலம் தீவைத்ததாக கூறப்படுகின்றது.
குப்பை ஒட்டு மொத்தமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போது, அதன் முன்பு நின்று ஸ்டைலாக ரீல் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
குப்பை கிடங்கிற்கு தீவைத்து வீடியோ எடுக்க உதவியாக இருந்த நகராட்சி ஊழியர் ஒருவரை பணி இடை நீக்கம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் ரீல் வீடியோ எடுக்க குப்பையை கொளுத்த உத்தரவிட்ட விவேக்கிடம் விசாரணை நடந்து வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விவேக், குப்பையில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்வையிடச் சென்ற போது, தனக்கு தெரியாமல் யாரோ வீடியோ எடுத்து பின்னணி இசையுடன் பதிவிட்டு விட்டதாகவும், இதனை வைத்து உள்ளூர் கவுன்சிலர் தன் மீது புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
Comments