பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!
பில்லி சூனியம் வைத்ததாக கருதி, மாமனார் மாமியாரை தம்பதி சகிதம் காரில் கடத்திச்சென்று கொலை செய்து ஓடும் காரில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அரக்கோணம் அருகே அரங்கேறி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் பட்டுநெசவுத் தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களின் மகள் சசிகலாவிற்கு திருத்தணியை சேர்ந்த சாய்ராம் என்பவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
மாணிக்கம் குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கிய சூழலில் கடனை அடைக்க முடியாமல் திணறி வந்தார்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை பகுதியில் உள்ள முட்புதரில் மாணிக்கம், ராணி தம்பதி செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அரக்கோணம் தாலுகா போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரனை நடத்தினர். சாய்ராமின் தம்பி தரணி, கூலிப்படையை சேர்ந்த சுனில்குமார், சந்திரன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
கணவர் சாய்ராமை பிரிந்து சசிகலா தாய் வீட்டில் வசித்து வரும் நிலையில், சாய்ராமிற்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சாய்ராம் உடல் நலம் நாளுக்கு நாள் குன்றி வருவதற்கு அவரது மாமியார் ராணி பில்லி சூனியம் வைத்திருக்கலாம் என சாய்ராம் குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சாய்ராமின் தம்பி தரணி , அண்ணனின் இந்த நிலைக்கு காரணம் அவரது மாமனார் மற்றும் மாமியார் தான் என்று கருதி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள கூலிப்படையை அணுகியுள்ளார்.
கூலிப்படை தலைவன் சுனில் என்பவன் தலைமையில் 5 க்கும் மேற்பட்டவர்களை கொண்ட கூலிப்படையினர் கடந்த 23 ந்தேதி மாலை மாணிக்கம் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
தரணி கூறிய ஆலோசனைபடி உங்களுக்கு கடன் அதிகளவில் இருப்பதால், திருத்தணியில் தங்களுக்கு தெரிந்த நபர் ஒருவர் தாராளமாக கடன் தருவதாகவும் எங்களுடன் வந்தால் கடன் பெற்று தருகிறோம் என ஆசைவார்த்தை கூறியதை நம்பி மாணிக்கம், ராணி தம்பதி அவர்களுடன் காரில் ஏறிச்சென்றுள்ளனர்.
கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது மாணிக்கத்தையும், ராணியையும் காருக்குள் வைத்தே கடுமையாக தாக்கி கொடூரமாக கொலை செய்ததாகவும், இருவரது சடலத்தையும் அந்த கும்பல் கைலாசபுரம் சாலை அருகே அடர்ந்த முட்புதரில் வீசி சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வதை விடுத்து, பில்லி சூனியம் என்று நம்பி இரு உயிர்களை கூலிக்கு ஆட்களை வைத்து கொலை செய்து வீசியிருப்பது மூட நம்பிக்கையின் உச்சம்..!
Comments