தேசிய கல்விக் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி
தமிழ் மொழி தனித்தன்மை வாய்ந்தது. தமிழர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் பிரதமர் மோடி சென்னையில் நிகழ்த்திய தமது உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் 32,500 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்றும், தேசிய கல்வி கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியும் தமிழர்களும் என்றும் சிறப்பு வாய்ந்தவர்கள் என தமது உரையில் மோடி சுட்டிக் காட்டினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார்.
செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தப் புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
இலங்கை நெருக்கடியான சூழ்நிலையை சந்திப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, அண்டை நாட்டுக்கு இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
இலங்கைக்குப் பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச அமைப்புகளால் இந்தியா தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி தமது உரையில் தெரிவித்தார்.
ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக, இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Comments