வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

0 6694

சென்னையில் நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தரமான உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு பிரதமர் சென்றார். அங்கு பிரதமரை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை அவருக்கு வழங்கினார். 

பின்னர் அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் சென்றார். வழிநெடுகிலும் பிரதமரை வரவேற்கும் விதமாக பாஜக சார்பில் மேளதாளத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தன்னை வரவேற்க சாலையோரம் திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்களை பார்த்து உற்சாகமாக பிரதமர் மோடி கையசைத்தார்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது ரெயில் பாதை, மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை, சென்னையில் கட்டுப்பட்டுள்ள 1152 வீடுகள் உள்ளிட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். 

துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம், சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை, சென்னையில் சரக்கு பூங்கா அமைத்தல், 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்ட 6 திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

வணக்கம் என்று கூறிய தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியின் பாடலை மேற்கோள் காட்டினார்.

தமிழ்மொழி நிலையானது, தமிழ் கலாச்சாரம் மிகப்பெரியது என்றும், அது சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேஷியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை பரவியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தலை சிறந்த தரமுடன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு என்பதை இலக்காக கொண்டு செயல்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முற்றிலும் கடமைப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் மோடி,தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நட்பு நாடான இலங்கை நெருக்கடியில் இருந்து மீளவும், பொருளாதார தேக்கநிலையில் இருந்து வெளிவரவும் இந்தியா தொடர்ந்து உதவும் என்று பிரதமர் தெரிவித்தார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக ஏராளமான உதவிகளை இந்தியா செய்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments