டோக்கியோவில் துவங்கிய குவாட் மாநாடு... இந்தியா - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை..!

0 2914

ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது.

இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை மாநாட்டு அரங்கில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கைகுலுக்கி வரவேற்றார்.

இன்று காலை தொடங்கிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளதாகவும், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் வலுவான செயல்பாடு தொடங்கியிருப்பதாகவும் பேசினார்.

கொரோனா நெருக்கடி காலத்தில் குவாட் நாடுகள் ஒருவொருக்கு ஒருவர் தடுப்பூசிகளை வழங்கி உறுதுணையாக இருந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னதாக, குவாட் கூட்டுறவில் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை குவாட் அமைப்பின் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின்படி மூலம் குவாட் அமைப்பின் நாடுகளைச் சேர்ந்த தலா 25 மாணவர்கள் வீதம் 100 மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்தும், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பின்போது பேசிய பைடன், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் உலகளாவிய பிரச்சனை என்றும் ரஷ்யாவின் போர் நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியை பைடன் பாராட்டினார். இதனை அடுத்து பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செய்யக்கூடிய வகையில் பல பணிகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நம்பிக்கை சார்ந்தது என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments