இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் புதிய வலுவான செயல்பாடு தொடங்கி உள்ளது - பிரதமர் மோடி
குவாட் அமைப்பின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் புதிய வலுவான செயல்பாடு தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். ஜனநாயக நாடுகளுக்கு புதிய ஆற்றல் பிறந்திருப்பதாக தமது பேச்சில் பிரதமர் குறிப்பிட்டார்.
குவாட் உச்சி மாநாடு டோக்கியோ நகரில் இன்று காலை இந்திய நேரப்படி 6.30 மணிக்குத் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷ்டா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பான்ஸி உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் மோடி குவாட் அமைப்பின் செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். மிகக் குறுகிய காலத்தில் குவாட் உலகில் முக்கியமான பங்களிப்பை செய்து வருவதாக மோடி கூறினார்.
பரஸ்பர நம்பிக்கை, பொது இலக்கு போன்றவை ஜனநாயக நாடுகளுக்கு புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் அளித்துள்ளதாக மோடி கூறினார். கோவிட் காலங்களில் தடுப்பூசிகள் விநியோகம் ,சுற்றுச்சூழல் செயல்பாடு பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் குவாட் நாடுகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.
பதவியேற்ற 24 மணி நேரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பானஸி குவாட்டை பலப்படுத்த இந்த மாநாட்டில் பங்கேற்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வலுவான இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகிக்கும் என்று உறுதியளித்தார்.
இதனிடையே இன்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நேராகப் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். உக்ரைன் ரஷ்யா போர், சீனாவின் எல்லை அத்துமீறல், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட உள்ளது.
Comments