போலீஸை விமர்சித்த வில்லங்க டி.ஜே மந்திரகோரா.. பாய்கிறது அவதூறு வழக்கு..! மங்கி பார் மதுவிருந்து அடாவடிகள்
சென்னை வி.ஆர் மாலில் நடந்த டிஜே நிகழ்ச்சியுடன் கூடிய மதுவிருந்தில் ஐடி ஊழியர் பலியானதை அடுத்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட சென்னை போலீசாரை அங்கு டி.ஜே.நிகழ்ச்சி நடத்திய உலகப் புகழ்பெற்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த டிஜே மந்திராகோரா, சமூகவலைதளத்தில் ஆபாசமாக வசைபாடி பதிவிட, அவரது ரசிகர்களும் போலீசாரை ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர்....
சென்னை அண்ணாநகரில் உள்ள வி.ஆர் மாலில் தி கிரேட் இண்டியன் கேதரிங்ஸ் என்ற பெயரில் மதுவிருந்துடன் வீக் எண்ட் கொண்டாட்டம் நடந்தது.
இதில் உலகப் புகழ்பெற்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த டிஜே மந்திராகோராவின் டிஜே நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ஆட்டம் போட்டனர்.
மதுவிருந்தில் பங்கேற்று அளவுக்கதிகமான போதையில் திளைத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி கம்பெனி ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழந்தார்.
டிஜே நிகழ்ச்சிக்கும் போலீஸாரிடம் முன் அனுமதி பெறவில்லை, அதேபோன்று டிஜே நிகழ்ச்சி என்ற பெயரில் போலீசுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக மதுவிருந்தையும் நடத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக சட்டவிரோதமாக உரிமமே இல்லாமல் மங்கி பார் என்ற பெயரில் மதுக்கூடம் இயங்கி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்து அந்த பாருக்கு சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரிடம் அனுமதி பெறாமல் இந்த டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் மேலாளர்கள் நிகாஷ் போஜராஜ், பாரதி, பார் ஊழியர் எட்வின் ஆகியோரை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல மாலில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதால், தனியார் மாலின் உரிமையாளரை அழைத்து விசாரணை நடத்தி அவரையும் வழக்கில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க டிஜே நிகழ்ச்சியில் போலீசார் நடத்திய நடவடிக்கைக்கு, சமூகவலைதளத்தில் டிஜே நிகழ்ச்சி ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டிஜே மந்திராகோரா, சென்னை போலீசாரை அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் வசை பாடி உள்ளார்.
மேலும், டிஜே நிகழ்ச்சி ஆதரவாளர்களும் சென்னை போலீசை அருவருக்கத்தக்க வார்த்தைகளை சமூகவலைதளத்தில் வசை பாடி வருகின்றனர்.
ஏற்கனவே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், போலீசாரை ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைத்தளத்தில் வசை பாடி வருபவர்களை, அவர்களுடைய டுவிட்டர் ஐடியை வைத்து அடையாளம் கண்டு அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர் .
Comments