நெஞ்சுக்கு நீதியில்லாமல் பேனர்... போலீஸ்காரர் மீது பாய்ந்தது வழக்கு..!
பெரம்பலூரில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் வைத்த ஆயுதப்படை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடமாற்றல் உத்தரவை திரும்ப பெறவைப்பதற்கு காவலர் கையாண்ட ராஜதந்திரம் வீணான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
பெரம்பலூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் கதிரவன். இவர் பெரம்பலூரிலிருந்து தஞ்சாவூருக்கு பணிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பணியில் சேராமல் மருத்துவ விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் பெரம்பலூர் பாலக்கரை சந்திப்பில் உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்குநீதி திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் பேனர் ஒன்றை வைத்து, தான் உதய நிதிக்கு நெருக்கம் என்பது போல காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பேனரில் அவரின் பெயருடன் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை என போட்டிருந்ததால் மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் இந்த பேனர் படம் வைரலானதால், உடனடியாக அந்த பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது. பாலக்கரை காவல் உதவி ஆய்வாளர் இளையபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் காவலர் கதிரவன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
போர்டு வைத்த போலீஸ்காரர் கதிரவன் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்குபதிவு செய்து பெரம்பலூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இடமாற்றல் உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பிளக்ஸ் பேனரை கதிரவன் அங்கு வைத்ததாக கூறப்படும் நிலையில் கதிரவன் மேற்கொண்ட ராஜதந்திரம் வீணாகி பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments