தோழி பிறந்தநாள் விழாவில் ‘ கேக் ’ சாப்பிட்ட சிறுமி பலி..! புட் பாய்சன் விபரீதம்

0 5206

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோழியின் பிறந்தநாள் விழாவில் கேக் சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விரும்பிய உணவே விஷமான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தாஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது 2வது மகள் 16 வயதான அபிராமி. தந்தை கார்த்திகேயன் இறந்துவிட்டதால் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

ஆற்காடு தோப்புகானா பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு வரை படித்துவந்த அபிராமி, தந்தையின் மரணத்துக்கு பின்னர் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி இரவு அபிராமி தனது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று கேக் சாப்பிட்டு விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்பொழுது அம்மாவிடம் பிறந்தநாள் விழாவில் அதிகமாக கேக் சாப்பிட்டதால் வயிறு வலிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் கவிதா சோடா வாங்கிக் கொடுத்துள்ளார். சோடாவை குடித்துவிட்டு உறங்கிய அபிராமி 19ந்தேதி காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகின்றது. தகவலறிந்த ஆற்காடு தாலுகா காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணன், அபிராமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அளவுக்கதிகமாக நிறமிகள் சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டதால் புட் பாய்சன் ஏற்பட்டு அதன் காரணமாக அபிராமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பிணக்கூறாய்வுக்கு பின்னரே அபிராமியின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

அபிராமியுடன் கேக் சாப்பிட்ட மற்றவர்களின் உடல்நிலை குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் கேரளாவில் சவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவத்தின் அறிகுறிகள் அபிராமியின் மரணத்திலும் காணப்படுவதால் வட்டார உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்பு அதிகாரிகள் அந்த கேக்கை தயாரித்த கடை குறித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments