இந்திய பண்பாட்டைக் காட்டும் கண்ணாடிகளாக மாநில மொழிகள் விளங்குகின்றன - பிரதமர் மோடி

0 2338

மொழியின் அடிப்படையில் சர்ச்சையை உருவாக்கச் சிலர் முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் மோடி, இந்திய பண்பாட்டைக் காட்டும் கண்ணாடிகளாக மாநில மொழிகள் விளங்குவதாகவும், அவற்றைப் போற்றுதலுக்குரியதாக பாஜக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தேசியச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடுவதுடன் அடுத்த 25 ஆண்டுக்கான இலக்குகளையும் பாஜக நிர்ணயிப்பதற்கான நேரம் இது எனத் தெரிவித்தார்.

மக்களின் விருப்பங்களும் அதை நிறைவேற்றுவதற்கான அரசின் பொறுப்பும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். பாஜக அரசின் 8 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டுக்காகவும், ஏழை நடுத்தர மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டுள்ளதுடன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாதுகாப்பு, சமூக நீதி ஆகியவற்றை உறுதிசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனசங்கக் காலத்தில் இருந்தே நாட்டைக் கட்டமைக்கும் கொள்கைகளைத் தொண்டர்கள் கடைப்பிடித்ததாகவும், அதிகாரத்தை அடையுமுன்னே நாட்டுப் பற்றுடன் விளங்கியதாகவும் தெரிவித்தார்.

சில கட்சிகள் நாட்டின் சிக்கல்களில் கவனம் செலுத்துவதில் இருந்து மக்களைத் திசைதிருப்புவதாகவும், அதில் சிக்காமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில் மொழியின் பெயரில் சர்ச்சையை உருவாக்கச் சில முயற்சிகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநில மொழியையும் போற்றுதலுக்குரியதாக பாஜக கருதுவதுடன், அவற்றில் நாட்டின் பண்பாட்டைக் காண்பதாகவும் தெரிவித்தார்.

தேசியக் கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முதன்மை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments