விசா முறைகேடு வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை.!
சீனர்களுக்குச் சட்டவிரோதமாக விசா வழங்கி முறைகேடு செய்த வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின்நிலையப் பணிக்கு வந்த சீனர்கள் 263 பேருக்கு விசாக் காலத்தை நீட்டிக்க அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 50 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்டெர்லைட் வேதாந்தா குழும நிறுவனத்தின் இயக்குநராகச் சிதம்பரம் இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, மும்பையில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து சென்னையில் இயங்கிய மெல்ட்ராக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்திருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன், டிஎஸ்பிஎல் நிறுவன நிர்வாகி விகாஸ், மும்பையைச் சேர்ந்த பெல் நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நேற்றுக் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் ஆகியோரின் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று பாஸ்கர ராமனைக் கைது செய்தனர். லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments