பிக்கப் வேனுடன் பீகாருக்கு எஸ்கேப்பான கொள்ளையர்கள் நக்கல் வீடியோ..! சுதாரிக்காத கோபியின் பரிதாபங்கள்..!
திருப்பத்தூர் அடுத்த நாட்ராம்பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பதினைந்தே நாட்களில் 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், வேன் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு பீகாருக்குச் சென்ற கொள்ளையர்கள் தங்களை யாராலும் பிடிக்க இயலாது என்று வீடியோ அனுப்பி சவால் விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் நிச் மற்றும் டெல்டா ஆகிய பெயர்களில் ஆர்.ஓ குடிநீர் பிளான்ட் வைத்துள்ளார். இதில் பணிபுரிய ஆட்கள் தேவை என சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இதனை கண்ட பீகாரை சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் ஆகிய 2 இளைஞர்களும் கடந்த மாதம் 27ஆம் தேதி தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி கோபிக்கு போன் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கோபியும் அவர்களை அழைத்து அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன் பணியமர்த்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்கிக் கொள்ள படுக்கை அறை வசதியும், பொழுது போக்குவதற்கு எல்.இ.டி டிவி வசதியும் ஏற்படுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் அடையாள அட்டை ஆதாரங்கள், புகைப்படங்களையும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.
இந்த நிலையில் பணிக்கு சேர்ந்து 15 நாட்கள் முழுமையடையாத நிலையில் இருவரும் தண்ணீர் கம்பெனியில் இருந்த பிக்கப் வேண், இதர வாகனங்களில் இருந்த 50 லிட்டர் டீசல், ரொக்கப் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள் ஒரு சிலிண்டர், எல்.இ.டி டிவி என அனைத்து பொருட்களையும் திருடி அள்ளிப்போட்டு வேணில் பீகாருக்கு தப்பிச்சென்றுள்ளனர்.
வழக்கம் போல காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் கம்பெனியின் சாவி வீதியில் வீசப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் கோபிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த கோபி கொள்ளை போன சம்பவம் அறிந்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், யார் என்ற உண்மை தெரியாமல், தங்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தங்கள் முதலாளியான கோபிக்கு, கொள்ளையர்கள் வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பி உள்ளனர்.
கொள்ளையன் நிர்மல் வண்டி ஓட்ட, மற்றொரு கொள்ளையன் மஞ்சித் எடுத்து அனுப்பி உள்ள அந்த வீடியோவில், நான் பீகாரை நோக்கி செல்கிறேன் என்னை எந்த போலீசாரும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளான் சம்பளம் குறைவு என்று ஊர் பெயர் தெரியாத இளைஞர்களை வேலைக்கு வைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சான்று.
Comments