கோயில் நிலையமான மகளிர் காவல் நிலையம்..! எல்லாம் மேலே இருக்குறவன் பார்த்துப்பான்..!
காவல் நிலையங்களில் வைத்து வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரிக்க கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டதால், கடலூர் காவல் நிலைய போலீசார் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக டிஜிபி அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் குறித்து நேரடியாக சென்று விசாரிக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை அந்த இடத்தில் சென்று விசாரிப்பது அவ்வளவு சாத்தியமாக இல்லை. இதனால் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் காவல் நிலைய வளாகத்திற்குள் உள்ள ஒரு கோவிலை தற்போது காவல் நிலையமாக மாற்றியுள்ளனர்.
இந்த கோவிலிலேயே ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என அனைவரும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
நாளொன்றுக்கு 10 க்கும் மேற்பட்ட புகார்கள் இந்த மகளிர் காவல் நிலையத்திற்கு வரும் நிலையில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக நேரடியாகச் சென்று விசாரித்து அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது சாத்தியம் இல்லாமல் இருப்பதால் இவர்கள் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கத் கூடாது என்று டிஜிபி உத்தரவை கடைபிடிக்கும் அதே நேரத்தில், பொது இடமான கோவிலை காவல் நிலையமாக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
புகார்களுக்கு உள்ளானவர்களை நேரில் வரவழைத்து அவர்களை அந்த கோவிலுக்கு உள்ளேயே வைத்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையை சரி செய்தால், வீடு தேடிச்சென்று விசாரிக்கும் பணியை இன்னும் விரைவாக நிறைவேற்ற இயலும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Comments